ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் எடுத்த தீர்மானம் – 70 ஆக உயர்ந்த ஓய்வூதிய வயது

ஐரோப்பாவிலேயே முதன்முறையாக டென்மார்க் அரசாங்கம் தனது ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன்சென் தெரிவித்துள்ளார்.
டென்மார்க் நாட்டில் 60–69 வயதினரானவர்கள் சுமார் 7.13 லட்சம் பேர் உள்ளனர். அதேசமயம், 70–79 வயதினர்கள் 5.80 லட்சமாக உள்ளனர். தற்போது 80,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய வயதுக்கு மேல் இருந்தும் பணியாற்றி வருகின்றனர்.
இது நல்வாழ்வு நிலை, பணியாளர் உரிமைகள் மற்றும் நிதி ஊக்குவிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று F&P அமைப்பு தெரிவித்துள்ளது.
F&P இயக்குநர் ஜான் வி. ஹான்சன், “இந்த உயர்வு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மக்கள் நீண்ட காலம் பணியாற்றும் போக்கே அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.