வங்கதேசத்தில் 100ஐத் தாண்டிய டெங்கு இறப்புகள் ; ஆகஸ்ட் மோசமாகலாம் நிபுணர்கள் எச்சரிக்கை

பங்ளாதேஷில் டெங்கிச் சம்பவங்கள் பெருக்கெடுத்து வருகின்றன.உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இவ்வாண்டில் மட்டும் டெங்கி நோயால் 101 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 24,183 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஆகஸ்டில் மட்டும் இதுவரை அந்நாட்டில் 19 பேர் டெங்கியால் இறந்தனர். ஜூலையில் 41 பேர் இறந்தனர்.
நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ஜஹங்கிர்நகர் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் வல்லுநர் கபிருல் பஷார் தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்நோய் மிகப்பரவலாக உள்ளது. வலுவான தலையீடு இல்லையென்றால் நிலைமையைச் சமாளிக்க மருத்துவமனைகள் திணறும், என்று பேராசிரியர் கபிருல் கூறினார்.நோய்த்தொற்றின் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதம் உச்சத்தைத் தொடவுள்ளது.
கொசு விரட்டிகளைப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் மக்களை ஊக்குவிக்கின்றனர். அத்துடன், வலைகளுக்குக் கீழ் உறங்குவது, கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேங்கீய நீரை அகற்றுவது போன்றவற்றை மக்கள் செய்யும்படியும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பூச்சி மருந்து தெளித்தல், சமூக அளவிலான தூய்மை இயக்கங்கள் போன்றவை தேவைப்படுவதாகவும் பேராசிரியர் கபிருல் கூறினார்.