இலங்கையில் தனியார் துறை ஊழியரின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரித்த கோரிக்கை
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/01.jpg)
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரை அரசு மற்றும் தனியார் துறை ஊழியரின் குறைந்தபட்ச சம்பளத்தை 50,000 ரூபாயாக நிர்ணயிக்கும் சட்டங்களை வகுக்குமாறும், அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 20,000 ரூபாக்குக் குறையாத சம்பள அதிகரிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட அரச ஊழியர் ஓய்வூதிய திட்டத்தை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் அமுல்படுத்துமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பி.எஸ். சாந்தப்பிரியா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, 7 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களிடையே உள்ள சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கும், அரச சேவையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்வதற்கும், அரச ஊழியர் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும், பொது சொத்து விற்பனையை நிறுத்துவதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு நல்ல வேலைத்திட்டத்தை வகுக்குமாறு அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு 12 தொழிற்சங்கங்களை உள்ளடக்கியது.