நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு வலியுறுத்து!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா Dilan Perera வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற உறுதிமொழிகள் கடந்தகாலங்களில் வழங்கப்பட்டன. எனினும், அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனினும், சந்திரிக்கா அம்மையார் அதற்குரிய முயற்சியை முன்னெடுத்தார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு இடமளிக்கவில்லை.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்துள்ளது. இதனை நிறைவேற்றுமாறு எதிரணிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து 2029 ஜனாதிபதி வேட்பாளர் பற்றி எதிரணிகள் கதைத்துக்கொண்டிருப்பது வேதனைக்குரிய விடயம்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.” – என்றார் டிலான் பெரேரா .
புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





