அமெரிக்க விமானப் போக்குவரத்து ஸ்தம்பிதம் – அதிகாரிகள் பற்றாக்குறையால் நீடிக்கும் தாமதங்கள்
அமெரிக்காவின் 30 முன்னணி விமான நிலையங்களில் கிட்டத்தட்டப் பாதியளவு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அதிகாரிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்தின் முடக்கநிலை 32வது நாளை எட்டியுள்ள வேளையில் இந்தச் செய்தி வெளியாகி உள்ளது.
நியூயோர்க் நகரம் விமானப் போக்குவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் ஒன்றாக உள்ளது. அங்கு 80 சதவீதமான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் வேலை செய்யவில்லை என்று விமானப் போக்குவரத்து நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் 101 நிமிடங்களும், ஆஸ்டினில் 50 நிமிடங்களும், நேஷ்விலில் 61 நிமிடங்களும் தாமதம் ஏற்பட்டன. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர் பற்றாக்குறை விமானச் சேவைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் குறைந்தபட்சம் ஒன்பது மையங்களில் ஊழியர் பிரச்சினை நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.





