பாதுகாப்பு, கனிம வளம்: ஒத்துழைக்க தென்கொரியா, மலேசியா ஒப்பந்தம்
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தென்கொரியாவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அவருடன் மலேசியப் பேராளர் குழுவும் சென்றுள்ளது.தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலைப் பிரதமர் அன்வார் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மலேசியாவின் இருப்பிலிருந்து கனிம வளங்களை தென்கொரியாவுக்கு விநியோகம் செய்வது, பாதுகாப்பு தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது ஆகியவை தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரியாவும் மலேசியாவும் திங்கட்கிழமையன்று (நவம்பர் 25) கையெழுத்திட்டன.
அடுத்த ஆண்டுக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடப்பாடு கொண்டுள்ளதாக இருநாட்டுத் தலைவர்களும் கூறினர்.
சேவைகள், முதலீடு, தூய எரிசக்தி ஆகியவை இதில் அடங்கும் என்று தென்கொரிய அதிபர் மாளிகை தெரிவித்தது.
தென்கொரியாவிடமிருந்து புதிய போர் விமானங்களை வாங்க மலேசியா ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்ப்பது தொடர்பாக அறநிறுவனம் ஒன்றை அமைக்க மலேசியாவும் தென்கொரியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
ரஷ்யா-வடகொரியா ராணுவ ஒத்துழைப்பு, காஸாவிலும் லெபனானிலும் நிலவும் மனிதாபிமான நெருக்கடிநிலை ஆகியவை குறித்து அதிபர் யூன்னும் பிரதமர் அன்வாரும் கவலை தெரிவித்தனர்.