கொவிட் – 19 தடுப்பூசியால் ஏற்படும் மரணங்கள் – ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை!
COVID-19 தடுப்பூசியால் இளைஞர்கள் மத்தியில் எவ்வித திடீர் மரணமும் ஏற்படவில்லை என்பதை புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்த தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானது எனவும் குறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் நடத்திய ஒரு வருட கால பிரேத பரிசோதனை அடிப்படையிலான ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மூன்றாம் நிலை பராமரிப்பு மையத்தில் ஒரு வருட கண்காணிப்பு ஆய்வு’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முதன்மை இதழான ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்போது வாய்மொழி பிரேத பரிசோதனை, பிரேத பரிசோதனை இமேஜிங், வழக்கமான பிரேத பரிசோதனை மற்றும் விரிவான ஹிஸ்டோபோதாலஜிக்கல் (histopathological) சோதனைகள் மூலம் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களின் திடீர் மரண வழக்குகளை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக ஆய்வு செய்தனர்.
இதன்போது கொவிட் தடுப்பூசியால் இளம் வயதினரிடையே மரணங்கள் ஏற்படுவதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மாறாக இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணங்கள் நன்கு அறியப்பட்ட மருத்துவ நிலைமைகளால் ஏற்பட்டதாகவும், இருதய நோய்கள் முக்கிய காரணமாக வெளிப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
COVID-19 தொற்று வரலாறு மற்றும் தடுப்பூசி நிலை இரண்டும் இளைய மற்றும் வயதான வயதினரிடையே ஒரே மாதிரியாக இருந்தன என்றும், தடுப்பூசி மற்றும் திடீர் மரணங்களுக்கு இடையே எந்த காரண தொடர்பும் காணப்படவில்லை என்றும் இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த முடிவுகள், COVID-19 தடுப்பூசிகளின் பாதுகாப்பை ஆதரிக்கும் உலகளாவிய அறிவியல் சான்றுகளுடன் ஒத்துப்போகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.





