தெற்குத் தாய்லாந்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு
தெற்குத் தாய்லாந்தைப் பாதித்துள்ள வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை குறைந்தது 29ஆக அதிகரித்திருப்பதாக புதன்கிழமையன்று (டிசம்பர் 4) அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 30,000க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சில நாள்களுக்குக் கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் ஏற்கெனவே தொடர் வெள்ளத்தால் 155,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தாய்லாந்து அரசாங்கத்தின் பொதுத் தொடர்புப் பிரிவு கூறியது.
பட்டானி, நராத்திவாட், சொங்க்லா, நக்கான் சி தம்மாராட், ஃபாத்தாலுங் ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 33,000க்கும் அதிகமானோர் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவானதாக தாய்லாந்தின் பொதுச் சுகாதார அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 3) 25ஆக இருந்த மரண எண்ணிக்கை புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி 29க்குக் கூடியது. வியாழக்கிழமை (டிசம்பர் 5) வரை நிலச்சரிவுகள், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று தாய்லாந்தின் கனிமவளப் பிரிவு எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவ தாய்லாந்து அரசாங்கம் மீட்புக் குழுக்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் 50 மில்லியன் பாட் (1.96 மில்லியன் ) தொகையை வெள்ள நிவாரண நிதியாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.