தென்கொரியாவில் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 அதிகரிப்பு

தென்கொரியாவின் தென்கிழக்குப் பகுதியில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.உயிரிழந்தோரில் பலர் முதியவர்கள் என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயணைப்புப் பணிகளில் ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு தென்கொரிய ராணுவ வீரர்களும் உதவுகின்றனர்.
இதுவே கடந்த பத்தாண்டுகளில் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீ என்பது குறிப்பிடத்தக்கது.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது.இதில் ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்தார்.அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் புதன்கிழமை (மார்ச் 26) நிகழ்ந்தது.இதையடுத்து, தீயணைப்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும் முறை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ மிக வேகமாகப் பரவி வருவதாகவும் 27,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பலத்த காற்று, கடும் வெப்பம் ஆகியவை நிலைமையை மோசமாக்கியுள்ளது.பல குடியிருப்புகள் காட்டுத் தீக்கு இரையாகின.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள சிறைகளில் இருந்த நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகள் வேறு சிறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
“தொடர்ந்து ஐந்து நாள்களாக காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இதனால் முன் இல்லாத அளவில் பேரளவிலான சேதம் எற்பட்டுள்ளது,” என்று தென்கொரியாவின் தற்காலிக அதிபர் ஹான் டக் சூ தெரிவித்தார்.
காட்டுத் தீ காரணமாக மீன்சாரமும் தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் மக்கள் அவதியுற்றதாக அவர் கூறினார்.காட்டுத் தீ மோசமடையக்கூடும் என்று தென்கொரிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.