இலங்கை: மருத்துவ பரிசோதனைக்கு முகம் கொடுத்துள்ள மரண தண்டனை கைதி துமிந்த சில்வா!
தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொலைக் குற்றவாளி துமிந்த சில்வாவின் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மருத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உருவாக்கப்பட்ட குழு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சில்வாவுக்கு தொடர்ந்தும் சத்திர சிகிச்சை தேவையா என்பதை மதிப்பீடு செய்யும்.
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் இந்த மதிப்பீடு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில்வாவுக்கு தனியான கழிவறை வசதி செய்து கொடுக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் திஸாநாயக்க நிராகரித்தார்.
சில்வாவின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய சோதனைகளில் கையடக்கத் தொலைபேசிகள் அல்லது தடைசெய்யப்பட்ட ஏனைய சாதனங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.