கேரளாவில் காதலனை கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை
கேரளாவில் காதலனை விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மாவட்டமான கன்னியாகுமாரியைச் சேர்ந்த இளம்பெண் கரீஸ்மா. அதேபோல, திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர் ஷரோன் ராஜ்.
2021ம் ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பு படித்த கரீஸ்மா, இளநிலை 3ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கரீஸ்மாவுக்கு அவரது பெற்றோர் ராணுவ அதிகாரி மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். அதற்கு அவரும் சம்மதித்தார்.
பின்னர், காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க வேண்டும் என்று நினைத்த கரீஸ்மா, பல மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து அவரை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், அது அவருக்கு பலன் அளிக்கவில்லை.
பின்னர், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் திகதி ஷரொன் ராஜை வீட்டுக்கு அழைத்த க்ரீஷ்மா, அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என குடிக்க வைத்தார்.
பின்னர், வீட்டிற்கு சென்றதும் இரவு பலமுறை ஷரொன் ராஜ் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சில நாட்களிலே உடல் பாகங்கள் செயல் இழந்து அவர் உயிரிழந்தார்.
பின்னர், அவரது குடும்பம் கரீஸ்மா மீது புகார் அளித்தது. அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில் கரீஷ்மா விஷம் கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து, இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்போது, நீதிபதி தீர்ப்பை வாசிக்க தொடங்கியதும் அழ தொடங்கிய க்ரீஷ்மா, மரண தண்டனையை அறிவிக்கவும் அழுகையை நிறுத்தி மௌனமானார்.