குயின்ஸ்லாந்தில் ‘டேனியல் சட்டம்’ அமுல்
அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘டேனியல் சட்டம்’ இன்று முதல் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய பொதுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்ட சிறுவன் டேனியல் மோர்கோம்பின் (Daniel Morcombe) பெற்றோரது நீண்டகால போராட்டத்தின் விளைவாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தின் மூலம், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்கள் மற்றும் உங்கள் பகுதியில் வசிக்கும் அதிக ஆபத்துள்ள நபர்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் அறிய முடியும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் பின்னணியைச் சரிபார்க்கும் வசதியும் இதில் உண்டு.
எனினும், இந்தப் பதிவேட்டில் உள்ள தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இதனை குயின்ஸ்லாந்து அரசு கருதுகிறது.





