யாகி சூறாவளியால் மியன்மாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226ஆக அதிகரிப்பு
மியன்மாரில் ‘யாகி’ சூறாவளியால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 226 என இரட்டிப்பானது.
சூறாவளியாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட 630,000 பேர் உதவி தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்து உள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்னால் மியன்மார், வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சிரமத்திற்கு ஆளாக்கிய யாகி சூறாவளியின் சீற்றம் காரணமாக பலத்த காற்றுடன் கடுமையான மழை பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது.அத்துடன் நிலச்சரிவுகளும் நிகழ்ந்ததால் பாதிக்கப்பட்ட நாடுகளில் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இதற்கிடையே, மியன்மாரில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 226க்கு அதிகரித்ததாக அந்நாட்டின் அரசாங்கத் தொலைக்காட்சி திங்கட்கிழமை (செப்டம்பர் 16) மாலை நைரம் தெரிவித்தது.ஞாயிற்றுக்கிழமை வரை 113 பேர் உயிரிழந்த நிலையில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 77 பேரைக் காணவில்லை என்றும் தொலைக்காட்சி கூறியது.
ஏறக்குறைய 260,000 ஹெக்டர் விளைநிலங்களை வெள்ளம் அழித்துவிட்டதாகவும் அது தெரிவித்தது.இந்நிலையில், மியன்மார் பேரிடரில் 631,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மனித உரிமை விவகார ஒத்துழைப்புக்கான ஐநா மன்றம் மதிப்பிட்டுள்ளது