CWC Update – இன்றைய போட்டிகளில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நெதர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக நெதர்லாந்து அணி 262 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரரான நிசாங்கா 54 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய பெரரா 5 ரன்களிலும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சதீர சமரவிக்ரம சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இன்று நடந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 399 ரன்களை குவித்தது.
400 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஜெரால்ட் கோட்ஸி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். லுங்கி நிகிடி, மார்கோ ஜான்சன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.