துருக்கி விபத்தில் காயமடைந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை
துருக்கியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் 9 பேர் தொடர்ந்தும் சிசிக்கை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு அருகில் 29 இலங்கை தொழிலாளர்கள் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி குன்றின் மீது விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் ஈடுபட்டிருந்த இவர்கள், தமது பணியை முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தே விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் 20 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மேலும் 09 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை குறித்து துருக்கியிலுள்ள இலங்கை தூதரகம் சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பில் துருக்கிய வெளிவிவகார அமைச்சுடன் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.