இலங்கையில் VAT அதிகரிப்பால் காத்திருக்கும் நெருக்கடி
இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச் சபையானது நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 9% மற்றும் 10% என தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகளின் அனைத்தையுமுள்ளடக்கிய பகுப்பாய்வொன்றினைத் தொடர்ந்து, நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை 5% மட்டத்தில் பேணுவதை இலக்காகக் கொண்டு சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, தற்போது 4% ஆக காணப்படுகின்ற பணவீக்கம், VAT வரி அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய காரணிகளின் தாக்கங்களால் குறுகிய காலத்திற்கு 7% வரை அதிகரிக்கலாமென, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நேற்று இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, கொள்கை வட்டி வீதங்களின் அடிப்படையில் சந்தை வட்டி வீதம் தற்போதைய மட்டத்திலிருந்து குறையும் எனவும், அவ்வாறு அது குறைய வேண்டுமென மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 டிசம்பரில் 1.90 பில்லியன் டெலாராக இருந்த வெளிநாட்டு கையிருப்பு 2023 டிசம்பரில் 4.4 பில்லியன் டெலாராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஆயினும் இதில் பயன்பாட்டிற்குரிய கையிருப்பானது, சீனாவிடமிருந்து பெற்ற கையிருப்பைத் தவிர்த்து 1.4 பில்லியன் டொலர் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டிலிருந்தான பண அனுப்பல்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை உள்ளிட்ட விடயங்கள் மூலம் வெளிநாட்டுக் கையிருப்பின் நிலை சாதகமான மட்டத்திற்கு செல்வதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2023 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 12.1% இனால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.