தாய்லாந்து அரசால் வலைவீசித் தேடப்பட்ட குற்றவாளி இந்தோனேசியாவில் கைது
தாய்லாந்து அதிகாரிகளிடமிருந்து தப்பித்து இந்தோனேசியாவின் பாலித் தீவில் தலைமறையாக இருந்த நபரை இந்தோனேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.
37 வயது சாவ்வாலிட் தொங்டுவாங், மே மாதம் 30ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டதாக இந்தோனேசியாவின் குற்றவியல் புலனாய்வுத்துறைத் தலைவர் வாயு விடாடா கூறினார்.
பாங் நா நோட் என்று அழைக்கப்படும் சாவ்வாலிட், கொலை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்தில் அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அப்போது தாய்லாந்தின் தென் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து அவர் தப்பினார்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விசைப் படகில் 17 மணி நேரப் பயணத்தக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.போலி அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை அவர் வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றுடன் சேர்த்து அவர் வைத்திருந்த இந்தோனேசிய வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சாவ்வாலிட், ஜூன் 4ஆம் திகதியன்று தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று இந்தோனேசியக் காவல்துறையின் அனைத்துலகத் தொடர்புப் பிரிவின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.