சுவிட்சர்லாந்து தீவிபத்து சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணைகள் ஆரம்பம்!
சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற தீவிபத்து தொடர்பில் சுவிஸ் மதுபான விடுதியின் இரண்டு நிர்வாகிகள் மீது குற்றவியல் விசாரணை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலாய்ஸ் (Valais) கிரான்ஸ்-மொன்டானாவில் (Crans-Montana) உள்ள ஸ்கை ரிசார்ட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் இந்த தீவிபத்து ஏற்பட்டதாக வழக்குறைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஷாம்பெயின் பாட்டில்களுடன் (champagne bottles) பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்பார்க்லர்கள் (sparklers), பாரின் ஒலிப்புகா கூரையுடன் தொடர்பு கொண்டபோது தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது விரைவான மற்றும் பரவலான தீ விபத்துக்கு வழிவகுத்தது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மதுபான விடுதி வழக்கமான சோதனைகளுக்கு உட்பட்டு விதிமுறைகளுக்கு இணங்கியதாக விடுதியின் உரிமையாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையிலேயே மேற்படி குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





