16–22 வயது இளைஞர்களின் குற்றங்கள் 200% அதிகரிப்பு – சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் அபாயம்
இலங்கையில் கடந்த 10 வருடகால பகுதியில், 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல நிறுவகம் 100 ஆண்டுகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் இளைஞர்களின் குற்றவியல் நடத்தைகள் அதிகரித்துள்ளமைய தெரியவந்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு அண்மித்த காலப்பகுதியின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தினால் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சட்ட உளவியல் விசேட வைத்திய நிபுணர் தாரக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது ஒரு பேரழிவு நிலைமை எனவும், இது தொடருமாயின் எதிர்காலத்தில் 16 முதல் 22 வயதுக்கு இடைப்பட்டவர்களால் சிறைச்சாலைகள் நிரம்பி வழியும் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
அத்துடன் மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள் என்ற கருத்து சமூகத்தில் வேரூன்றியுள்ளதாகவும், அது முற்றிலும் தவறான கட்டுக்கதை என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நபர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதன் ஊடாக அவர்களை மாற்றியமைக்க முடியும் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.





