பெண்களின் மருத்துவ கல்வி தொடர்பில் தாலிபன்காளின் முடிவுக்கு எதிராக குரல் கொடுத்துள்ள கிரிக்கெட் வீரர் ரஷீத் கான்
பேறுகால பெண்களுக்கு துணை செய்வது (midwifery) மற்றும் நர்சிங் படிப்புகளை பெண்கள் பயில ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் அரசு தடை விதித்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. குறிப்பாக தாலிபன் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பெண்கள் மருத்துவ நிறுவனங்களுக்கு செல்வதைத் தடுக்கும் உத்தரவை வெளியிட்டதாக செய்திகள் வெளியானது. அந்நாட்டில் ஏற்கனவே மருத்துவம் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களது பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது, இந்த விவகாரத்தில் ரஷீத் கான் தனது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ள அவர், “இஸ்லாமிய போதனைகளில் கல்வி மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது ஆண்களும் பெண்களும் அறிவைப் பெறுவதை வலியுறுத்துகிறது. குர்ஆன் கற்றலின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது. மேலும், இரு பாலினருக்கும் இருக்கும் சமமான ஆன்மீக மதிப்பினை அங்கீகரிக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சமீபத்தில் மூடப்பட்டது ஆழ்ந்த வருத்தமும் மிகுந்த ஏமாற்றமும் அளிக்கிறது.
இந்த முடிவு அவர்களை மட்டுமல்ல, நமது சமூகத்தின் பரந்த கட்டமைப்பையும் ஆழமாக பாதிக்கும். சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் வெளிப்படுத்தும் வலி மற்றும் துக்கம் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களின் நினைவூட்டலாக இருக்கிறது.
ஆஃப்கானிஸ்தான் மிக முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும் வல்லுநர்கள் தேவை, குறிப்பாக மருத்துவத் துறையில் மிகத் தேவை. மகளிர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை மிகவும் கவலைக்குறியது. இது பெண்களின் உடல்நலனை மிக பாதிக்கும். எங்கள் சகோதரிகள் மற்றும் தாய்மார்களின் தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் மருத்துவம் மிகவும் அவசியமான ஒன்று.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன். ஆஃப்கானிஸ்தான் பெண்கள் தங்களது கல்வி உரிமையை மீட்டெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்புமட்டுமல்ல., நமது நம்பிக்கைகளில் ஆழமாக வேரூன்றிய தார்மீகக் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியமும் தாலிபான்களின் முடிவுகள் தொடர்பாக வெளியாகும் செய்திகள் குறித்து தனது கவலைகளைப் பதிவு செய்துள்ளது. “ஆஃப்கானிஸ்தான் மக்களது துன்பங்கள் மேலும் அதிகரிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தனது கவலைகளை வெளிப்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளது.