“இனி கிரிக்கெட் ஆடப் போவதில்லை” – ஓய்வை அறிவித்தார் தினேஷ் கார்த்திக்
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தினேஷ் கார்த்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவருக்கு 39 வயது ஆகிறது.
தினேஷ் கார்த்திக் கடைசியாக கடந்த மாதம் 2024 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
சர்வதேச அளவில் வங்கதேசத்திற்கு எதிரான 2022 டி20 உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில் கடைசியாக இந்திய அணிக்காக ஆடி இருந்தார்.
2004 செப்டம்பரில் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார் தினேஷ் கார்த்திக்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்தியாவுக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவருக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.
தற்போது வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் தினேஷ் கார்த்திக், 2024 ஐபிஎல் தொடருடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கடந்த சில நாட்களாக நான் பெற்ற பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை சாத்தியமாக்கிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த நன்றி மற்றும் மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சிறிது காலமாக நிறைய யோசித்துவிட்டு, கிரிக்கெட்டில் நான் எனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, வரவிருக்கும் புதிய சவால்களுக்காக நான் விளையாடும் நாட்களை பின்னுக்குத் தள்ளுகிறேன்.” என்றார்.
“இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
நம் நாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி வரும் நிலையில், நாட்டுக்காக ஆடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதற்காக நான் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். மேலும் பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது இன்னும் அதிர்ஷ்டம்.” என்றார்.
மேலும், “இத்தனை ஆண்டுகளில் என் பெற்றோர்கள் எனக்கு தூண்களாக இருந்து பலம் மற்றும் ஆதரவை அளித்தனர். அவர்களின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் நான் இந்த நிலையை அடைந்து இருக்க முடியாது.
மேலும் தொழில்முறை விளையாட்டு வீராங்கனையான தீபிகா என்னுடன் பயணம் செய்ய வேண்டி தனது விளையாட்டை நிறுத்தி வைத்தார். அதற்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்.” என்று தனது ஓய்வுக் குறிப்பில் தினேஷ் கார்த்திக் கூறி இருக்கிறார்.
இறுதியாக, “நிச்சயமாக, எங்கள் சிறந்த விளையாட்டின் அனைத்து ரசிகர்களுக்கு ஒரு பெரிய நன்றி! கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள், உங்கள் ஆதரவு மற்றும் நல்வாழ்த்துக்கள் இல்லாமல் நிலையாக இருக்க முடியாது.” என்று நன்றி கூறினார் தினேஷ் கார்த்திக்.