ஒலிம்பிக் போட்டிகளில் இனி கிரிக்கெட்டும் உண்டு… 123 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள ஒப்புதல்
2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியையும் சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டி கடந்த 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் முதன்முதலில் நடைபெற்றது. ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தடகளம், குத்துச்சண்டை, வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், ஜிம்னாஸ்டிக்ஸ், மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த ஒலிம்பிக் (2024ம் ஆண்டு ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மும்பையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 2028ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் 5 போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, அந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட், பேஸ்பால், ப்ளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் (சிக்சஸ்) ஆகிய 5 விளையாட்டுகளை சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டை போன்று 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தொடரும் நடக்க உள்ளது. கடைசியாக 1900ம் ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதன்பிறகு 123 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.