இந்தியாவில் குழந்தைக்கு பெயர் வைக்க முடியாமல் விவாகரத்து வரை சென்ற தம்பதி
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என முடிவெடுப்பதில் தம்பதிகளுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த தம்பதி நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். தங்களின் மகனுக்கு என்ன பெயர் வைப்பது என்று இருவரும் மூன்று ஆண்டுகள் சண்டைபோட்டதாக தெரியவந்துள்ளது.
இறுதியில் அவர்கள் விவாகரத்து வரை சென்றுவிட்டனர். சிக்கல் 2021ஆம் ஆண்டு தொடங்கியது. மனைவி மகனைப் பெற்றவுடன் தாய்வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
கணவன் மகனுக்குத் தேர்ந்தெடுத்த பெயர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. பெயரை மனைவி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கணவன் அவரைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை.
மனைவியும் தமக்குப் பிடித்த பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். மாதங்கள் வருடங்களாகின. மனைவி தாய்வீட்டிலேயே இருந்தார்.
கணவரிடமிருந்து நிதி ஆதரவு பெற அவர் உள்ளூர் நீதிமன்றத்தை நாடினார். தம்பதிக்கு இடையிலான பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தது.
தம்பதியும் அந்தப் பெயருக்கு ஒப்புக்கொண்டனர். அவர்களின் மகனுக்கு ஆர்யவர்தனா (Aryavardhana) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தம்பதியும் தங்களின் திருமண பந்தத்தைத் தொடர முடிவெடுத்தனர்.