திருகோணமலையில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – நீதிமன்றத்தின் உத்தரவு!
திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கற்பழித்த குற்றவாளிக்கு 10வருட கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம் அப்துல்லாஹ் இன்று (02.10) குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரினால் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தண்டனைச் சட்டக் கோவை 364 (02) உப பிரிவு மற்றும் 436 பிரிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்தது.
இதனடிப்படையில் குறித்த வழக்கின் சந்தேக நபரான சேருநுவர-தெஹிவத்தை பகுதியில் வசித்து வரும் ரன்கொத் பேடிகே உதார பெதும் (26வயது) என்ற சந்தேக நபர் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து குற்றச்சாட்டுகளும் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டன.
இதேவேளை குறித்த வழக்கின் தீர்ப்பினை திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டியதுடன் 2000 ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





