சிங்கப்பூரில் இளம் யுவதியின் பொய்யான தகவலால் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் போலியான தகவல்களை வழங்கி முறைப்பாடு செய்த இளம் யுவதி ஒருவருக்கு நீதிமன்றம் நன்னடத்தை உத்தரவு விதித்துள்ளது.
20 வயதான கிளாரிஸ் லிங் மின் ருய் (Claris Ling Min Rui) என்ற யுவதிக்கு எதிராகவே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12 மாத நன்னடத்தை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையும் குறித்த யுவதிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், லிங்கின் நன்னடத்தையை உறுதி செய்ய அவரது பெற்றோர் 5,000 வெள்ளி ரொக்கப் பணத்தை பிணையாகச் செலுத்த வேண்டும். அத்துடன், 60 மணி நேரம் சமூகச் சேவையும் செய்ய வேண்டும் என லிங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
43 வயதான நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பொய்யான புகாரை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பாகக் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உண்மைத் தன்மை அம்பலமாகி உள்ளது.
சமூக வலைத்தளம் ஊடாக ஒரு ஆணுடன் லிங் தொடர்பைப் பேணியுள்ளார். அவருடன் தனிமையில் இருப்பதற்காக 200 வெள்ளியை குறித்த யுவதி கோரியுள்ளார்.
அதன்படி, திட்டமிட்ட வகையில் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்தபோது 1,200 வெள்ளி பணத்தைத் தருமாறு கோரியுள்ளார். எனினும், 500 வெள்ளியை மட்டும் குறித்த ஆண் வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, குறித்த ஆணுக்கு எதிராகப் பொய்யான புகாரை லிங் மின் ருய் மேற்கொண்டிருந்தார்.
நீதிமன்ற விசாரணையில் தனது குற்றத்தை லிங் ஒப்புக்கொண்டதால் அவருக்கு நன்னடத்தை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டிய குற்றவியல் வழக்கு என்றபோதிலும், இளம் யுவதி என்ற அடிப்படையில் கடும் நிபந்தனையுடன் நன்னடத்தை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





