இந்தியாவில் விஷ வண்டு கடிதத்தில் தம்பதி மரணம் ;ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தென்காசியில் விஷ வண்டு கடித்து 85 வயது சண்முகம் பிள்ளை, அவரது 78 வயது மனைவி மகராசி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை சீவநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) மதியம் அன்னதானம் நடந்தது. இதையொட்டி கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டுக் (கடந்தை குளவி) கூடு திடீரெனக் கலைந்து அதிலிருந்து வண்டுகள் அங்கும், இங்குமாய் பறந்து, அந்த வழியாகச் சென்றவர்களைக் கடித்துள்ளது.
வலியில் துடித்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சண்முகம் பிள்ளையும் அவரது மனைவி மகராசியும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்னை மரத்தில் இருந்த விஷ வண்டுக் கூட்டை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.