RCB கேப்டன் ரஜத் படிதாரின் பழைய தொலைபேசி எண்ணால் எழுந்த சர்ச்சை

2025 IPL தொடரில் முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மணீஷ் என்பவர் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய ஃபோன் நம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் முந்தைய மொபைல் எண் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்ததால், அந்த நம்பர் செயல் இழந்து புதிய நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ரஜத் படிதாரின் பழைய போன் நம்பருக்கு கால் செய்துள்ளனர்.
இதனை தெரிந்து கொண்ட ரஜத் படிதார் அந்த நபருக்கு போன் செய்து ‘நான் ரஜத் படிதார் பேசுகிறேன்.. அந்த நம்பரை திருப்பி கொடுத்துவிடு’ என கேட்டுள்ளார். இதனை நம்பாத அந்த நபர் ‘அப்படியா நான் தோனி பேசுகிறேன்’ என கிண்டலாக பேசியுள்ளார்.
இதனையடுத்து சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு போலீசார் வந்து விசாரித்தபோதுதான் இது உண்மை என அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் மணீஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சிம் கார்டை திருப்பி அனுப்பினார்.