கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் உடை குறித்து சர்ச்சை கருத்து – மலேசிய பிரபலத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நட்சத்திரம் ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடை பற்றி மலேசியாவின் பிரபல சமையல் கலை நிபுணரான ரெட்சுவான் இஸ்மாயில் சமூக ஊடகத்தில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
‘ஷெஃப் வான்’ என்று அழைக்கப்படும் ரெட்சுவான் இஸ்மாயில், ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடையைப் பார்த்துவிட்டு அதைக் காவடியுடன் ஒப்பிட்டார்.
“ஐஸ்வர்யா ராய் காவடியை அணிந்துகொண்டு பத்துமலையில் நடைபெறும் தைப்பூச விழாவுக்குச் செல்கிறார்,” என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.ஷெஃப் வானின் இந்தக் கருத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.அவரது கருத்து இந்தியர்களையும் இந்து சமயத்தினரையும் இழிவுப்படுத்தும் வகையில் இருப்பதாகப் பலர் சாடினர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஷெஃப் வானிடம் விசாரணை நடத்துவதாக மலேசியாவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஷெஃப் வானுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை செந்துல் காவல்துறை உதவி ஆணையர் அகமது சுகார்னோ முகம்மது ஸஹாரி உறுதி செய்தார்.
மலேசியாவில் உள்ள பல இன, பல சமய மக்களைப் பிளவுப்படுத்தக்கூடிய கருத்தை ஷெஃப் வான் சமூக ஊடகத்தில் பதிவிட்டதால் இந்த வழக்கு தொடர்பான விசாரணையைக் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக அவர் கூறினார்.