ஒப்பந்த அடிப்படையில் முடிவுக்கு வந்த அமெரிக்க துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்தம்
அமெரிக்காவில் துறைமுக ஊழியர்களுக்கும் துறைமுக நடத்துநர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் வளைகுடா துறைமுகங்கள் ஸ்தம்பித்துவிட்டன.அடுத்த ஆறு ஆண்டுகளில் 67 சதவீதம் சம்பள உயர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பேச்சு வார்த்தை பற்றி நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. அதாவது வாழ்நாள் ஒப்பந்தத்தில் மணிக்கு 39 டொலரிலிருந்து மணிக்கு 63 டொலராக ஊதியம் அதிகரிக்கும்.
இண்டர்நேஷனல் லாங்ஷோர்மென்ஸ் அசோசியேஷன், 77 சதவீதம் சம்பள உயர்வுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து துறைமுக நடத்துநர்களைப் பிரதிநிதிக்கும் அமெரிக்காவின் கடல்சார் கூட்டணி ஏறக்குறைய 50 சதவீதம் வரை சம்பள உயர்வை அளிக்க முன்வந்தது.
இந்த நிலையில் ஆறு ஆண்டுகளில் 62 சதவீதம் சம்பள உயர்வுக்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளது.இதையடுத்து ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளில் இல்லாத ஆகப் பெரிய வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மேய்ன் முதல் டெக்சாஸ் வரை கப்பல்களிலிருந்து சரக்குகள் இறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் வாழைப் பழம் முதல் வாகன உதிரிப் பாகங்கள் வரை தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்பட்டது.அது மட்டுமல்லாமல், சரக்குகளோடு ஏராளமான கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே காத்திருக்க நேரிட்டது.
இந்த மூன்று நாள் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் அமெரிக்காவின் பொருளியலில் ஒரு நாளுக்கு ஐந்து பில்லியன் டொலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஜேபி மோர்கன் தனது பகுப்பாய்வில் மதிப்பிட்டுள்ளது.
ஊழியர் சங்கமும் துறைமுக நடத்துநர்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இரு தரப்பு முதன்மை ஒப்பந்தக் குத்தகையை 2025ஆம் ஆண்டு ஜனவரி 15 வரை நீட்டிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
சில பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. குறிப்பாக சரக்குகளை தானியக்க இயந்திரங்கள் மூலம் கையாள கப்பல் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது, வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்று ஊழியர்களுக்குக் கவலையாக உள்ளது.