பாகிஸ்தானில் தொடரும் பதற்றம்! ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகள் மூலம் கோரிக்கை
பாகிஸ்தானில் மத நிந்தனையில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகள் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் சுமார் ஒரு டஜன் பேரிடம் புலன்விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. அவர்களில் இஸ்லாமிய சமயத் தலைவர் ஒருவரும் அடங்குவார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் மத நிந்தனையில் ஈடுபட்டதாகத் தகவல்கள் பரவியதை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தானில் வன்செயல்கள் வெடித்தன. 80க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் வீடுகளும் 19 தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இது பற்றி தகவல் தெரிவித்த பஞ்சாப் மாநில காவல்துறை தலைவர் உஸ்மான் அன்வார், பள்ளிவாசல் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தியதன் தொடர்பில் 12 பேர் புலன்விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர்களில் சமயத் தலைவர் ஒருவரும் அடங்குவார் என்றும் தெரிவித்துள்ளார்.
வன்செயல் தொடர்பாக 125க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.