ஆளுங்கட்சிக்கு தலையிடியாக மாறிய கொள்கலன்கள்: விசாரணை ஆரம்பம்!
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
கொள்கலன் விடுப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்கான நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றக் குழு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கூடியது.
குழுவின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் முறை மற்றும் குழுவிற்கு அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் தொடர்பில் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் இதன்போது இடம்பெற்றன.
மூன்று மாத காலத்திற்குள் விசாரணை நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாக குழுவின் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
அமைச்சர் அநுர கருணாதிலக, பிரதி
அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல, அர்கம் இல்யாஸ் ஆகியோர் மேற்படி குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, அஜித்.பி.பெரேரா, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர உள்ளிட்டோரும் குழு உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மேற்படி கொள்கலன்களின் புலிகளின் ஆயுதங்களே வந்தன என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அர்ச்சுனா எம்.பி. முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





