260 கனேடிய கல்லூரிகளுக்கு ஆட்கடத்தலில் தொடர்பு ; இந்திய அமலாக்கத் துறை
அமெரிக்க-கனடிய எல்லையில் 2022ஆம் ஆண்டு கடுங்குளிரில் துன்புற்று உயிரிழந்த குஜராத்தி குடும்பத்தினர் தொடர்பான விசாரணையின்போது கனடிய கல்லூரிகளுக்கு ஆட்கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி, ஜகதீஷ் பட்டேல், 35, அவரது மனைவி வைஷாலி, 11 வயது மகள், 3 வயது மகன் என நால்வரும் சட்டவிரோதமாகக் கனடாவிலிருந்து அமெரிக்கா செல்ல முயன்றபோது குளிரில் விறைத்து உயிரிழந்தனர்.
எல்லையில் உள்ள மணிடோபா எனுமிடத்தில் அவர்கள் நால்வரும் உயிரிழந்து கிடந்தனர்.உறைநிலைக்குக்கீழ் 37 டிகிரி செல்சியஸ் (-37°Celsius) குளிரில் ஆட்கடத்தல் கும்பல் அவர்களை பனிப்புயலில் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இந்திய அமலாக்கத் துறை, பட்டேல் குடும்பத்தினர் அமெரிக்கா செல்ல உதவிய முகவர்கள் மீது பணமோசடி குறித்த விசாரணையை மேற்கொண்டது.அதில் அனைத்துலக ஆட்கடத்தல் கும்பல் பற்றித் தெரியவந்தது. அக்கும்பலில் கனடாவைச் சேர்ந்த 260 கல்லூரிகளும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோதக் குடியேறிகள் கனடா வழியாக அமெரிக்கா செல்ல ஏதுவாக அவை மாணவர் விசாக்களை வழங்குவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவர் விசா பெற்றுத்தரும் முகவர்களுக்கு 50 முதல் 60 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். அவர்கள் கனடா சென்ற பின்னர் அங்கிருந்து அமெரிக்காவிற்குள் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்துதரப்படும். இவ்வாறு சட்டவிரோதமாக கனடியக் கல்லூரிகள் எவ்வளவு தொகை ஈட்டின என்பதன் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
“இந்தியர்களைச் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு, முகவர்கள் முதலில் கனடியக் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்வர். விசா பெற்றவர் கனடா சென்றடைந்ததும் கல்லூரியில் சேர்வதற்குப் பதில் அவர்கள் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து அமெரிக்கா செல்வர்,” என்று அமலாக்கத் துறை கூறியது.
டிசம்பர் 10, 19ஆம் திகதிகளில் அமலாக்கத் துறை, மும்பை, நாக்பூர், காந்திநகர், வதோதாரா ஆகிய இடங்களில் உள்ள முகவர் அலுவலகங்களில் சோதனை நடத்தியது. கனடிய கல்லூரிகளுக்குச் சட்டவிரோதக் குடியேறிகளை அனுப்பும் வேலையில் அந்த முகவர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதால் அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில், மும்பையிலும் நாக்பூரிலும் உள்ள முகவர்கள் இருவர் ஒவ்வோர் ஆண்டும் 35,000 பேரைச் சட்டவிரோதமாகக் கனடா அனுப்புவது தெரியவந்ததாக அமலாக்கத் துறை புதன்கிழமை ( 25) கூறியது.