இந்தியாவுடனான மோதல் :சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தும் பாகிஸ்தான்

சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.இருநாடுகளுக்கும் இடையிலான முதலீடு அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டது.இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குலில் 26 பேர் உயிரிழந்தனர்.இதை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ மூலம் தகர்த்தது.நான்கு நாள்களுக்குப் பிறகு சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுடன் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.இதை பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
சண்டை நிறுத்தத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர்.இந்தச் சந்திப்பு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை (மே 20) நிகழ்ந்தது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.தனது இறையாண்மையைக் காக்க பாகிஸ்தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.
நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது மட்டுமன்றி வர்த்தகம், முதலீடு, விவசாயம், தொழில்துறை போன்றவற்றில் சீனாவுடனான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முட்டாகியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர்.
சீனா-பாகிஸ்தான் பொருளியல் பாதையை ஆப்கானிஸ்தானுக்கு விரிவுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.சீனாவின் வர்த்தக இணைப்புப் பாதைத் திட்டத்துக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கப்படும் என அறியப்படுகிறது.இந்த மூன்று வெளியுறவு அமைச்சர்களும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் சந்திப்பர் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.