55 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு சலுகைகள் – அமைச்சர் மனுஷ நாணயக்கார
55 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு தொழில்துறைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்த முன்முயற்சியில் தேவையான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பது அடங்கும், இது “கருசரு” திட்டத்துடன் இணைந்து உருவாக்கப்படும், என்றார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற “நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
பண்டிகைகளை கொண்டாடுவதற்கு மன சுதந்திரம் இல்லை என்ற விமர்சனங்களுக்கு மேலும் பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வெசாக், பொசன், எசாலை மற்றும் கிறிஸ்மஸ் ஆகிய பண்டிகைகளை கொண்டாடுவதற்கான சூழலை மீட்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாக வலியுறுத்தி, சரியான பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்குமாறு விமர்சகர்களுக்கு சவால் விடுத்தார்.