ஆசிரியர் நியமிக்காமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
திருகோணமலை ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக தெரிவித்து இன்றையதினம் திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட சமூக ஆர்வலர்கள் வருகை தந்திருந்தனர்.
பல வருட காலமாக குறித்த பாடசாலையில் நிலவிவரும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்து தருமாறு கோரிக்கை விடுத்த போதிலும் இது தொடர்பாக அரச மட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் முறையிட தாம் வருகை தந்ததாகவும் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையினால் 50% மாணவர்களே சித்தியடைந்தனர்.
அதனை தொடர்ந்து கடந்ங காலங்களில் குறித்த பாடசாலையில் உயர்தரம் நடாத்தப்படவில்லை இதற்கு ஆசிரியர் பற்றாக்குறையும் வளப்பற்றாக்குறையுமே காரணமாகும்.
ஆனாலும் 2022ம் ஆண்டு வெளியான சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும் போதிய ஆசிரியர்கள் இன்மையால் அவர்களால் குறித்த பாடசாலையில் உயர்தரத்தினை தொடர முடியாதுள்ளது.
இதனால் மாணவர்கள் வெளிப்பாடசாலைகளுக்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இம்முறையும் 2023ம் ஆண்டு வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் இக்கிராமத்தைச்சேர்ந்த மாணவர்கள் சித்தியடைந்து உயர்தம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
குறித்த மாணவர்கள் குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், பெற்றோரின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.