கோவை – நள்ளிரவில் தேவாலயத்திற்குள் புகுந்து சூறையாடிய பாதிரியார்கள் இருவர் கைது..!
கோவையில் தேவாலயம் ஒன்றில் நள்ளிரவில் புகுந்து பொருட்களை சூறையாடியதாக இரண்டு பாதிரியார்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பந்தய சாலை பகுதியில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ பேராலயத்தின் ஆல் சோர்ஸ் தேவாலயத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே இந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு மற்றும் தேவாலய விதிகளுக்கு மாறாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததால் சிஎஸ்ஐ பேராலய பிஷப் திமோத்தி ரவீந்தர் இருவரையும் பணி நீக்கம் செய்ததுடன் தேவாலயத்திற்கு உட்பட்ட குடியிருப்பையும் காலி செய்து வெளியேறுமாறு உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவு பிறப்பித்து ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இருவரும் அங்கிருந்து வெளியேறாமல் இருந்ததுடன் தொடர்ந்து தேவாலய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் காரணமாக அவ்விருவர் மீதும் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில் நேற்று இரவு தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடத்துவதற்காக நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த சார்லஸ் சாம்ராஜ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அத்துமீறி தேவாலய பிரார்த்தனை அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த கதவுகளை உடைத்ததுடன் சிசிடிவி கேமராக்களையும் சூறையாடியுள்ளனர்.
மேலும் சில பொருட்களை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து தேவாலயத்தின் செயலாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பந்தய சாலை காவல் நிலைய போலீசார் அத்துமீரலில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர் .ஈஸ்டர் தினத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.