வித்தியாசமான சுவையில் காபி: சந்தேகத்தில் CCTV பொருத்திய கணவருக்கு தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
அமெரிக்கர் ஒருவர், தனது காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால் சந்தேகம் ஏற்படவே, வீட்டில் ரகசிய கமெராக்களை பொருத்தி வைத்துள்ளார்.
அமெரிக்க விமானப்படை வீரரான ராபி ஜான்சனுக்கு , தன் குடிக்கும் காபி வித்தியாசமான சுவையில் இருந்ததால், தன் மனைவி மெலடி தன் காபியில் எதையோ கலப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காபியை சோதிக்கும்போது, அதில் அதிக அளவில் குளோரின் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார் ராபி.
தன் காபியில் பிளீச் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவே, சமையலறை, துணி துவைக்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடம், இரண்டுக்கும் இடையில் உள்ள பகுதி ஆகிய இடங்களில் ரகசியமாக கமெராக்களை பொருத்திவைத்து கண்காணித்துள்ளார் ராபி.அப்போது, மெலடி துணி துவைக்கும் இடத்திலிருந்து எதையோ எடுத்துவந்து ராபியின் காபியில் கலப்பது தெரியவந்துள்ளது.
தக்க ஆதாரங்களுடன் ராபி பொலிஸாரிடம் புகாரளித்ததைத் தொடர்ந்து, மெலடி கைது செய்யப்பட்டுள்ளார். மெலடி பிலிப்பைன்சில் தனது உறவினர்கள் வாழும் இடத்தின் அருகே புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.
ராபியைக் கொன்றுவிட்டு, அவர் இறந்ததால் கிடைக்கும் பணத்துடன் தன் ஊருக்கு சென்று செட்டில் ஆக மெலடி திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.ராபியின் புகாரைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை மெலடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு, உணவில் விஷம் கலந்தது முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.