உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை கத்தியால் குத்திய 11ம் வகுப்பு மாணவர்
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மிஹின்பூர்வாவில் உள்ள நவாயுக் இன்டர் கல்லூரியில் 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்பறையில் தனது மொபைல் போனை பறிமுதல் செய்ததற்காக ஆங்கில ஆசிரியரை கத்தியால் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
ராஜேந்திர பிரசாத் என்ற ஆசிரியர் பலத்த காயம் அடைந்து மாவட்ட மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் ராமானந்த் பிரசாத் குஷ்வாஹா, “கல்லூரியில் செல்போன் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதால், மூன்று நாட்களுக்கு முன்பு, ஆசிரியர் பல மாணவர்களின் மொபைல் போன்களைப் பறிமுதல் செய்தார். இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த ஒரு சிறுவன் ஆசிரியரை தாக்கினான்.” என்று தெரிவித்தார்.
காயமடைந்த ஆசிரியர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவரது காயங்களின் தீவிரம் காரணமாக அவரை மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆசிரியையின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மாணவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றத்திற்குப் பயன்படுத்திய கத்தியும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
மருத்துவமனை படுக்கையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் பிரசாத், “சில நாட்களுக்கு முன்பு, ஒரு சில மாணவர்களின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன, பின்னர் அவை திருப்பி அனுப்பப்பட்டன. இருப்பினும், சில மாணவர்கள் இந்த நடவடிக்கையால் கோபமடைந்தனர். மூன்று மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.” என தெரிவித்தார்
மற்ற மாணவர்களின் தொடர்பு இருப்பதாக ஆதாரம் இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதிகாரி தெரிவித்தார்.