Site icon Tamil News

சர்வதேச மாநாட்டில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு!

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச மாநாடொன்றில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இம்மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்று, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரேனிய தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

அதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரேனிய கொடியை மற்றொரு ரஷ்ய எம்பியான வெலேறி ஸ்டாவிட்ஸ்கி பறித்தார். அதன்பின் இவ்விரு எம்.பிகளுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது இவ்விருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்தனர். மேலும் ரஷ்ய எம்பி ஸ்டாவிட்ஸ்கி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version