இஸ்ரேலில் பொலிஸார் மற்றும் யூத யாத்திரிகர்கள் இடையே மோதல் ; 19 அதிகாரிகள் படுகாயம்
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள யூத சமய விழாத் தலமான மவுண்ட் மெரோனில் மே மாதம் 26ஆம் திகதியன்று இஸ்ரேலிய பொலிஸாருக்கும் யூத யாத்திரிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
காஸா போருக்குக் கண்டனம் தெரிவித்து லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்கள் நடத்துவதனால் இவ்வாண்டு அந்த இடத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் மூடினர்.
இருப்பினும், கடந்த வாரயிறுதியில் அந்த இடத்துக்கு ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் செல்ல முயன்றதாகவும் திரும்பிச் செல்லுமாறு பொலிஸார் அவர்களுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் பொலிஸாரின் உத்தரவைப் புறக்கணித்து விழா நடைபெறும் இடத்தை அடைந்ததாகக் கூறப்படுகிறது.அங்கு இருந்த பொருள்களை அவர்கள் சேதப்படுத்தியதுடன் அதிகாரிகளை நோக்கி கற்களை எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் 19 அதிகாரிகள் காயமடைந்தனர்.மேலும் யாத்திரிகர்கள் பலர் காயமுற்றதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
முதியவர் ஒருவரைக் கீழே தள்ளி விட்ட குற்றத்திற்காக ஓர் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ப்டுகிறது.சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.