வௌவால்களிடமிருந்து பரவக்கூடிய புதிய வகைக் கொரோனா கிருமியை அடையாளம் கண்ட சீன ஆய்வாளர்கள்

சீன ஆய்வாளர்கள் வௌவால்களிடமிருந்து பரவக்கூடிய புதிய வகைக் கொரோனா கிருமியை அடையாளம் கண்டுள்ளனர்.‘HKU5-CoV-2’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய கிருமி மனிதர்களுக்கும் பரவக் கூடிய திறன் கொண்டது என்று அவர்கள் கூறினர்.அது கொவிட்-19 கிருமியைப் போன்றே பரவும் திறனுடையது என்பதால் மீண்டும் மிகப் பெரிய கிருமிப் பரவல் ஏற்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.
வௌவால்களிடமிருந்து பரவும் கொரோனா கிருமிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தியதால் வௌவால் பெண்மணி என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற கிருமியலாளர் ஷி செங்லியின் தலைமையிலான ஆய்வுக் குழு புதிய கிருமியை அடையாளம் கண்டதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேடு தெரிவித்தது.
குவாங்ஸோ ஆய்வுக்கூடம், குவாங்ஸோ அறிவியல் கல்விக்கழகம், வூஹான் பல்கலைக்கழகம், வூஹான் கிருமியியல் கல்விக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்ற அந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) ‘செல்’ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
புதிய வகைக் கிருமி மனிதர்களுக்குப் பரவக்கூடிய அபாயம் அதிகம் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. நேரடியாகவோ மற்றொரு விலங்கின் மூலமாகவோ அது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று கூறப்படுகிறது.
வெவ்வேறு விலங்குகளுக்கு இடையிலும் இந்த வகைக் கிருமி பரவும் என்று அஞ்சப்படுகிறது.அது மனிதர்களுக்கும் பரவும் சாத்தியம் இருந்தபோதும் இந்த மிரட்டலை மிகைப்படுத்த வேண்டாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கொவிட்-19 கிருமியுடன் ஒப்புநோக்க, புதிய கிருமியின் செயல்திறன் குறைவு என்பதால் பேரளவில் மனிதர்களிடையே பரவும் என்று மிகைப்படுத்திக் கூறக்கூடாது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
ஷி செங்லி, கொவிட்-19 தொடர்பான ஆய்வுகளில் முக்கியப் பங்கு வகித்தவர். வூஹான் கிருமியியல் கல்விக்கழகம்தான் கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பொறுப்பு என்று கூறப்பட்டதை முன்பே இவர் நிராகரித்தார்.கொவிட்-19 கிருமியின் தோற்றம் குறித்த விவாதம் தொடர்ந்தாலும் அது வௌவால்களிடம் தோன்றி பின்னர் மற்றொரு விலங்கு வாயிலாக மனிதர்களுக்குப் பரவியதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.