தைவானை அழிப்பதே சீனாவின் தேசிய குறிக்கோள்: அதிபர் லாய் சிங் டே
தைவானை அழிப்பதை சீனா தனது பெரும் தேசிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்று தைவானிய அதிபர் லாய் சிங் டே கூறியுள்ளார்.
தைவான் தேசிய ராணுவப் பயிற்சிக் கழக வீரர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 16) அன்று உரையாற்றிய தைவானிய அதிபர் எதிரிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் தோல்வி மனப்பான்மைக்கு இடம்தரக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அதிபர் லாய் மே மாதம் பதவி ஏற்றதிலிருந்து அவரை கடுமையாகத் தனிப்பட்ட முறையில் தாக்கி வந்துள்ளது. அவரைப் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தி, அவரது பதவியேற்பு நிகழ்வின்போது தைவானை சுற்றி ராணுவப் போர்ப் பயிற்சிகளை நடத்தியது.
தைவானின் எதிர்காலத்தை தமது நாட்டு மக்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று கூறும் திரு லாய், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவரது முயற்சியை சீனா உதறித் தள்ளியது.
இந்நிலையில், தைவானில் உள்ள வாம்போ ராணுவப் பயிற்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு நினைவு நாளைக் கொண்டாடும் நிகழ்வில் கலந்துகொண்டு லாய் உரையாற்றினார். அதில் தைவானிய ராணுவப் பயிற்சி வீரர்கள் புது யுகத்தின் சவால்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
“சீனாவின் வலுவான வளர்ச்சியே மிகப் பெரிய சவால். அது தைவானிய நீரிணையின் தற்கால நிலையை மாற்றி, சீனக் குடியரசை இணைத்து, அதை அழிப்பதை தன் நாட்டு மக்களின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது,” என்று தமது நாட்டை அதன் அதிகாரத்துவப் பெயரான சீனக் குடியரசு என்று குறிப்பிட்டார்.