இலங்கை வரும் சீனாவின் இராணுவ பயிற்சிக் கப்பல் : இந்தியாவின் நிலைப்பாட்டில் தாக்கம் செலுத்துமா?

இராஜதந்திர உறவுகளில் அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சமநிலையான முறையில் செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது போல் சீனாவுடனும் வர்த்தகம் செய்து வருகிறோம்.
சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்கப்பல் இம்மாதம் மெரிட் நகருக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் உண்மையில் எந்த நாட்டையும் சிறப்பு வாய்ந்ததாக கருதவில்லை. இலங்கை பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் அனைத்து நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறது.
சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் எங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை.
நாங்கள் இராஜதந்திர உறவுகளைப் பேணுகிறோம். இந்தியாவுடன் நாங்கள் சோலார் பேனல்களை வழங்கும் திட்டம் உள்ளது. இதற்கு முன்பும் அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள் வந்துள்ளன அனைத்து நாடுகளுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் இராணுவ கப்பல்கள் இலங்கை வருவதில் இந்தியா விரும்புவதில்லை. இந்நிலையில் அண்மையில் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இந்தியாவின் நலனுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது என ஜனாதிபதி அனுர குமார தெரிவித்திருந்தார்.
இதன் பின்னணியிலேயே அமைச்சரின் விளக்கம் வந்துள்ளது.