சீனாவின் இராஜதந்திரம் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எதிரானது அல்ல – டிரம்பிற்கு பதிலடி

சீனாவின் எந்தவொரு நாட்டுடனான ராஜதந்திர உறவுகளும், மூன்றாம் தரப்பினருக்கு எதிரானதல்ல என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார்.
சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்கின்றன என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தினார்.
“சீனா தனது வெளிநாட்டு உறவுகளை வளர்க்கும் போது, அது எந்த மூன்றாம் தரப்பு நாட்டையும் எதிர்க்கும் நோக்கத்தில் அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போராட்ட வெற்றி மற்றும் உலக பாசிசத்திற்கு எதிரான போரின் 80வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சீன அரசு வெளிநாட்டு விருந்தினர்களை அழைத்து, உலக நாடுகளுடன் இணைந்து அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புவதாக கூறினார்.
இவை தொடர்பான குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் நிராகரிக்கிறது என்றும், வரலாற்றை நினைவுகூரும் போது, அமைதியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தைக் கட்டமைக்க உறுதியாக உள்ளது என்றும் குவோ ஜியாகுன் தெரிவித்தார்.