தைவானிய இணையத் தாக்குதல் குறித்து விழிப்புடன் இருக்கும்படி சீனா வலியுறுத்தல்
சீனா, ஹாங்காங், மக்காவைக் குறிவைத்து தைவானைச் சேர்ந்த இணையத் தாக்குதல் குழு செயல்பட்டு வருவதாகச் சீனா தெரிவித்துள்ளது.இதனையடுத்து, ‘அனானிமஸ் 64’ என்ற அக்குழுவின் எதிர்ப்புப் பிரசார நாசவேலை குறித்துப் புகார் அளிக்கும்படி இணையவாசிகளை சீனாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சு ஒரு வலைப்பதிவு மூலம் வலியுறுத்தியுள்ளது.
‘அனானிமஸ் 64’ குழுவானது தைவானின் இணையப் போர்முறைப் பிரிவைச் சேர்ந்தது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து அக்குழு சீனாவின் அரசியல் அமைப்பு, முக்கியக் கொள்கைகள் ஆகியவற்றை இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை இணையத்தளங்கள், வெளிப்புறத் திரைகள், தொலைக்காட்சி நிலையங்கள்வழி பரப்புவதற்கு முயன்று வருவதாக அமைச்சு தெரிவித்தது.
சீனக் குழுக்கள் இணையம்வழி தவறான தகவல்களைப் பரப்ப முயல்வதாக அல்லது தன் நாட்டில் இணையத் தாக்குதல்களை நடத்த முயல்வதாக அவ்வப்போது தைவானும் குற்றஞ்சாட்டி வருகிறது.
தைவான் தனது இறையாண்மைக்கு உட்பட்டது எனக் கூறிவரும் சீனா, அதனை உறுதிப்படுத்தும் நோக்குடன் கடந்த ஐந்தாண்டுகளாகவே ராணுவம், அரசியல் சார்ந்த நெருக்குதல்களையும் அதிகப்படுத்தியுள்ளது.
‘அனானிமஸ் 64’ இணைய ஊடுருவல் குழு 2023 ஜூன் மாதம் தொடங்கப்பட்டதாக அதன் எக்ஸ் ஊடகப் பக்கம் தெரிவிக்கிறது.
பேரரசராகச் சீன அதிபர் ஸி ஜின்பிங், சீனாவின் கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் இரண்டாம் ஆண்டு நிறைவு, 1989 தியானன்மென் சதுக்க ஆர்ப்பாட்டங்களை நினைவுகூர்தல் போன்றவை தொடர்பான காணொளிகளை ஒளிபரப்புவதற்கான முயற்சிகளைக் குறிப்பிடும் Screenshots அந்த எக்ஸ் பக்கம் காட்டுகிறது.இதன் தொடர்பில் தைவான் உடனடியாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.
அத்துடன், அந்த ‘அனானிமஸ் 64’ குழு தைவானிலிருந்து செயல்படுகிறதா அல்லது சீனா குற்றம் சாட்டுவதைப்போல உண்மையிலேயே அது இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அச்செய்தி குறிப்பிட்டது.