போரில் ரஷ்யாவிற்கு உதவும் சீனா – உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு
போரில் ரஷ்யாவிற்கு சீனா உதவுவதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.
சீனா ரஷ்ய உளவுத்துறையுடன் துணைக்கோள் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே உயர்நிலை ஒத்துழைப்புகள் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதென உக்ரைன் உளவுத்துறை அதிகாரி ஓலே அலெக்ஸாண்ட்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனிலுள்ள இலக்குகளை அடையாளம் காணவும் ஆராயவும் அவ்விரு நாடுகளும் துணைக்கோள்களைப் பயன்படுத்தியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனா ரஷ்யாவிற்கு ஆயுதங்களையும் வெடிபொருள்களையும் வழங்கிவருவதாக இவ்வாண்டின் தொடக்கத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.
சீனா ரஷ்யாவில் ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான ஆதாரமும் தமது அரசாங்கத்திடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே ரஷ்ய உக்ரைன் போரில் தனக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதைப் பெய்ச்சிங் தொடர்ந்து மறுத்து வருகிறது.





