சீனா – வடகொரியா ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதிமொழி
சீனாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதனைக் கொண்டாடும் வகையில் இருநாடுகளுக்கும் இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை அளிப்பதற்கான உறுதிமொழிகளைச் சீன, வடகொரியத் தலைவர்கள் அக்டோபர் 6ஆம் திகதி பரிமாறிக்கொண்டதாக அதிகாரபூர்வ வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“சீனா – வடகொரிய உறவை மேம்படுத்த நான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அண்மை ஆண்டுகளாக, பல சந்திப்புகள், தனிப்பட்ட கடிதங்கள், செய்திகளைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் மூலம் வடகொரியத் தலைவரான உங்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன்,” எனச் சீன அதிபர் ஸி ஜின்பிங் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு அனுப்பியச் செய்தியில் கூறியுள்ளார்.
மேலும், வலுவானத் தொடர்பு, ஒத்துழைப்பு மூலம் இரு நாட்டு உறவுகளின் புதிய அத்தியாயத்தைத் தொடர சீனா தயாராக உள்ளதாகவும் சீன அதிபர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு கிம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உறவுகளை மேம்மடுத்தியதைச் சீனா கவனித்து வந்தது. வட கொரியாவும் ரஷ்யாவும் பரஸ்பர பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கிய உத்திபூர்வ ஒப்பந்தம் ஒன்றில் இவ்வாண்டு கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
“சீனா, வடகொரியா இடையே இருக்கும் உறவை ஒருங்கிணைக்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்து முயற்சிப்பேன் என உறுதி அளிக்கிறேன்,” எனச் சீன அதிபருக்குப் பதிலளித்தார் வடகொரியத் தலைவர் கிம்.