உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண அரபு நாடுகளுடன் இணையும் சீனா
அரபு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணத் தயார் என சீன ஜனாதிபதி சி சின்பிங் தெரிவித்துள்ளார்.
பெய்ச்சிங்கில் நடைபெற்ற சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் கருத்தரங்கில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
பஹ்ரேன், எகிப்து, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், துனிசியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், வேறு சில அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் அதில் கலந்துகொண்டனர்.
அரபு நாடுகளுடன் பெய்ச்சிங்கின் உறவை இன்னும் பலப்படுத்த விரும்புவதாகச் சீன ஜனாதிபதி தெரிவித்தார். காஸா நெருக்கடி குறித்துப் பேசிய அவர், காலவரம்பின்றிப் போர் தொடர முடியாது என்றார்.
இருநாட்டுத் தீர்வை ஏற்றுக்கொள்ளுமாறு சீன தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மனிதாபிமான நெருக்கடியில் இருந்து காஸா மீள சீனா தொடர்ந்து உதவும் என்றும் சீன ஜனாதிபதி கூறினார்.
போருக்குப் பிறகு காஸா வட்டாரத்தைச் சீரமைக்கவும் சீனா கைகொடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.