அமெரிக்கா செல்லும் சீனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா!
அமெரிக்கா செல்லும் சீனக் குடிமக்களுக்கு சீன அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டு அதிகாரிகளின் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கும்படி பெய்ச்சிங் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சீனா அவ்வாறு கூறியுள்ளது.
அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், சமய வன்முறை ஆகியன குறித்துச் சீனா அவ்வப்போது குடிமக்களுக்கு நினைவூட்டுவது வழக்கமாகும்.
ஆனால் சட்டவிரோதக் கைது அபாயம் குறித்து வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவது அரிதாகும்.
சீனா செல்லும் அமெரிக்கர்கள் தவறாகத் தடுத்து வைக்கப்படும் அபாயம் இருப்பதால் பயணத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி வாஷிங்டன் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது.
அண்மையில் சீனா சென்ற அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெலன் (Janet Yellen) இருதரப்பு உறவு உறுதியடையும் சூழல் நெருங்கியிருப்பதாகத் கூறியிருந்தார். இந்நிலையில் இரு நாடுகளும் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளன.