இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கிய சீனா!
சீன அரசாங்கம் இலங்கைக்கு 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) நன்கொடையாக வழங்கியுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, இந்தத் தொகையை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இக்கூட்டத்தில், வெள்ளத் தடுப்பு மற்றும் மேலாண்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசரகால நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நீண்டகால உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுப்பதற்கும், அவ்வாறான நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் திறனை மேம்படுத்துவதற்கும் கடைப்பிடிக்கக்கூடிய நிலையான தீர்வுகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.